எரேமியா 48:10 – “கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்”
எரேமியா 48:10 கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்.
1) அறிமுகம் - எரேமியா 48ம் அத்தியாயம்
எரேமியா 48 முழுவதும் மோவாப் தேசத்தின் மீது தேவனுடைய தீர்ப்பு பற்றி பேசுகிறது.
மோவாப் தேசம்:
- தன்னம்பிக்கையால் நிரம்பியது (48:7)
- சுகபோகத்தில் வாழ்ந்தது (48:11)
- இஸ்ரவேலை இகழ்ந்தது (48:27)
- தன் கடவுளான ‘கெமோஷ்’ மீது நம்பிக்கை வைத்தது (48:13)
தேவனின் நியாயத்தீர்ப்பை எழுதப்பட்டாகிவிட்டது, எதிரி நாடு தன் தண்டனையை செலுத்த தாமதிப்பதைப் பற்றி 10ம் வசனம் கூறுகிறது. அதாவது கர்த்தர் ஒரு வேலையை கொடுத்தால், அதனை அசதியாக செய்யக்கூடாது என்பது தான் கருத்து இங்கே (வசனம் 10).
ஆனால் தேவன் கூறுகிறார்: “என் வேலையை அலட்சியமாகச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்.”
இது மோவாப் தேசத்துக்கு மட்டுமல்ல.
இது தேவனுடைய ஜனங்களுக்கும் ஒரு எச்சரிக்கை.
2) “கர்த்தருடைய வேலை” என்றால் என்ன?
திருச்சபைக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கர்த்தருடைய முக்கியமான வேலை என்பது:
A. இரட்சிப்பு வேலை
- சுவிசேஷத்தை அறிவித்தல்
- ஆத்மாக்களை ஆதாயம் செய்தல்
B. பரிசுத்த வாழ்வு
- தேவனுக்கு அர்ப்பணிப்பு
- உலகத்தோடு சமரசமில்லா வாழ்க்கை வாழுதல்
C. சபை ஊழியம்
- ஜெபம்
- ஆராதனை
- இளைஞர் பணி
- சமூக சேவை
கொலோசெயர் 3:23 Colossians 3:23
"நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனுஷருக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்”
தேவனுக்கான வேலை சாதாரண வேலை அல்ல. அது நித்திய விளைவுகளை உண்டாக்கும் வேலையாகும்.
3) “அலட்சியம்” என்ற ஆபத்து
அலட்சியம் என்பது:
- அரைமனதான சேவை
- பொறுப்பில்லாத தலைமை
- ஜெபமில்லா வாழ்க்கை
- பாவத்தை அனுமதிக்கும் சமரசம்
எரேமியா 48:11 ல் “மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாய் வாழ்ந்தது; என்று சொல்லப்படுகிறது.
- அவர்கள் சுத்திகரிக்கப்படவில்லை.
- அதனால் அவர்கள் வீழ்ந்தார்கள்.
இன்று நம் சபைகளில்:
- பாடல் உண்டு, ஆனால் பயிற்சி இல்லை
- பிரசங்கம் உண்டு, ஆனால் ஆய்வு இல்லை
- இளைஞர்கள் உண்டு, ஆனால் அர்ப்பணிப்பு இல்லை
- ஊழியம் உண்டு, ஆனால் ஜெபம் இல்லை
வெளிப்படுத்தின விசேஷத்தில் (3:16), இவ்விதமாக சொல்லப்பட்டுள்ளது:
- “நீ வெதுவெதுப்பாய் இருக்கிறாய்…”
தேவன் வெதுவெதுப்பை வெறுக்கிறார். அனலாக இருக்கவேண்டிய நாம், வெதுவெதுப்பாக இருப்பது தான் ஒரு பரிதாபம்.
4) “தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன்” – ஆழமான அர்த்தம்
பழைய ஏற்பாட்டில் பட்டயம் என்பது நீதி மற்றும் நியாயத்தீர்ப்பை குறிக்கிறது.
இன்றைய காலத்தில் ஆவிக்குரிய விஷயங்களில், வட்டாரங்களில், சபைகளில்:
- உண்மையை பேசாமல் மவுனம் காக்குதல்
- பாவத்தை எதிர்க்காதிருத்தல்
- தவறான போதனையை அனுமதித்தல்
போன்றவற்றை நாம் கண்டித்து உணர்த்தவேண்டும், இல்லையேல், நம் பட்டயத்தை 'அடக்கிக்கொள்கிறவர்கள் என்றும், கர்த்தரின் நீதியை அசதியாக செய்பவர்கள்' என்றும் பெயர் சூட்டப்படுவோம் (எரேமியா 48:10).
எபேசியர் 6:17ன் படி:
- “தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்”
நாம் தேவனுடைய வார்த்தையை பயன்படுத்துகிறோமா? இல்லையா அதை மறைக்கிறோமா?
சில முக்கியமான முடிவுகளில், சபையில் மௌனமாக இருப்பதும் பாவமாக கருதப்படலாம், கருதப்படும்.
5) மோவாம் இடமிருந்து நாம் கற்கும் பாடங்கள் – நமக்கான எச்சரிக்கை:
மோவாப் தேசத்திடம்:
- செல்வம் இருந்தது
- அமைதி இருந்தது
- மதம் இருந்தது
ஆனால் உண்மையான தேவனை இழந்து காணப்பட்டது.
இன்று மோவாப் போன்று நம்மிடம்:
- நமக்கு கட்டிடம் உண்டு
- சவுண்ட் சிஸ்டம் உண்டு
- YouTube சேனல் உண்டு
ஆனால் தேவனுடைய வார்த்தையும், கீழ்படிதலும் நம்மிடம் இல்லையெனில்?
நம் நிலை மோவாபின் நிலை தான்.
6) தேவனின் இதயம் – கருணை
எரேமியா 48:31ல் கீழ்கண்டவாறு வேதனைப்படுகிறார்:
- “ஆகையால் மோவாபினிமித்தம் நான் அலறி, மோவாப் தேசம் அனைத்தினிமித்தமும் கூக்குரலிடுவேன்.”
தேவன் தண்டிக்கிறார், ஆனால் ஒரு தகப்பனைப்போல அவர்களுக்காக துக்கப்படுகிறார்.
மேலும், எரேமியா 48:47ல், ஒரு நம்பிக்கையையும் தருகிறார்:
- ஆனாலும் கடைசிநாட்களில் மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மோவாபின்மேல் வரும் நியாயத்தீர்ப்பின் செய்தி இத்தோடே முடிந்தது.
மோவாப் தேசத்திற்காக ஒரு எச்சரிக்கையும் உண்டு, எதிர்கால நன்மைக்கான நம்பிக்கையும் உண்டு.
7) கடைசியாக, இன்று தேவன் கேட்கிறார்:
உங்கள் ஊழியம் உயிரோடு, இருக்கிறதா? அதில் அனல் உண்டா?
- உங்கள் ஜெபம் உயிரோடு இருக்கிறதா?
- உங்கள் பட்டயம் கூர்மையா?
- உங்கள் அழைப்பு உயிரோடு இருக்கிறதா?
இன்று ஒரு தீர்மானம் எடுப்போம்:
“கர்த்தாவே, அலட்சியமில்லாமல் உம்முடைய கிரியையைச் செய்வேன்.
அரைமனதான கிறிஸ்தவத்தை விட்டுவிடுகிறேன். முழு அர்ப்பணிப்போடு உமக்காக வாழ்கிறேன்.”
இறுதி ஜெபம்:
- “கர்த்தாவே, எங்கள் வாழ்க்கையில் இருக்கும் அலட்சிய ஆவியை நீக்கிவிடும்.
- உம்முடைய கிரியையை முழுமையாகச் செய்யும் அனலை எங்களில் உண்டாக்கும்.
உம்முடைய வார்த்தையை தைரியமாக அறிவிக்கும் மனதை தாரும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமேன்.”

Comments
Post a Comment