வேதமே வழி - 1 கொரிந்தியர் 13வது அதிகாரம் கேள்விகள் - Bible is the Way
Source: https://www.youtube.com/watch?v=ssgqEtGlZ8I
1. 1 கொரிந்தியர் 13வது அத்தியாயம்:
பரிசுத்த வேதாகமத்தை ஆழமாக அறிந்துக்கொள்ள ஒரு சிறந்த வழி, ஒவ்வொரு அத்தியாயத்தை படிக்கும் போது, முதலாவது அதிலிருந்து சில கேள்விகளை முதலாவது அறிந்துக்கொண்டு, அதன் பிறகு அந்த அத்தியாயத்தை படித்தால், அக்கேள்விகளுக்கான பதில் அவ்வத்தியாயத்தை படிக்கும் போது நம் கண்களுக்கு தெளிவாகத் தெரியும், மேலும் முக்கியமான மற்றும் ஆழமான விவரங்கள் நாம் அறிந்துக்கொள்ள முடியும். இல்லையென்றால் மேலோட்டமாக படித்துக்கொண்டு சென்றுவிடுவோம். மேலும், ஒரு குழுவாக சேர்ந்து வேத ஆராய்ச்சி செய்யும் போதும், இந்த வேதமே வழி கேள்விகள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
1 கொரிந்தியர் 13வது அத்தியாயம்:
கேள்விகள்:
1 ) இந்த அத்தியாயத்திற்கு நீங்கள் ஒரு பெயரை கொடுக்க விரும்பினால் என்ன பெயர் கொடுப்பீர்கள்? இதனை படிக்கும் போது, முழு அத்தியாயத்தையும் ஓரிரு வார்த்தையில் அடக்கும் வகையில், ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை கண்டுபிடியுங்கள், அதுவே இவ்வத்தியாயத்தின் பெயராக வைக்கலாம்.
2) ஆவிக்குரிய வரங்களில் எவைகளைக் காட்டிலும் அன்பு சிறந்தது என்று ஆவியானவர் இங்கு குறிப்பிடுகிறார் (வசனங்கள் 1,2,3)?
3) இந்த அத்தியாயத்தின் படி, தராசின் ஒரு தட்டில் அன்பையும், இன்னொரு தட்டில் ஆவிக்குரிய வரங்களை வைத்தால், எது ஜெயிக்கும்?
4) ஆவிக்குரிய வரங்களில் எவைகள் ஒழிந்துப்போய்விடும், ஓய்ந்துப்போய்விடும் (நின்றுவிடும்) என்று எந்த வசனத்தில் படிக்கிறோம்?
5) அன்பு எந்தெந்த காரியங்களைச் செய்யும்? எந்தெந்த காரியங்களைச் செய்யாது (வசனங்கள் 4-8)?
6) வசனம் 10ன் படி, எது நிறைவானது? எது குறைவானது? ஏன் நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்துப் போய்விடும் (நின்றுவிடும்)?
7) நம்முடைய அறிவும், தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் எப்படிப்பட்டது?
8) விசுவாசம், நம்பிக்கை, மற்றும் அன்பு இவைகளின் எது பெரியது? இதற்கான காரணங்களை சிந்தித்துப் பாருங்கள்?
9 ) இப்பொழுது கண்ணாடியில் யாரை நிழலாட்டமாய் பார்க்கிறோம்? அப்பொழுது யாரை முகமுகமாய் பார்ப்போம்? 'அப்பொழுது' என்ற வார்த்தை எதிர்காலத்தில் எந்த காலத்தை குறிக்கிறது?
10) 1 கொரிந்தியர் 12வது மற்றும் 14வது அத்தியாயத்தை படித்துப் பாருங்கள், அதோடு இந்த 13வது அத்தியாயத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். ஆரம்பத்தில் அத்தியாய பிரிவுகள் இல்லை, எனவே, 12, 13, 14வது அத்தியாயங்களை கோர்வையாக ஒரே அமர்வில் படித்துப் பார்த்து, உங்கள் மனதில் ஆவியானவர் சொல்வதை, உங்கள் எண்ணங்களை எழுதிவைத்துக் கொள்ளுங்கள். இந்த மூன்று அதிகாரங்களை படித்து மற்றும் செய்த ஆய்வின் மூலம் நீங்கள் அறிவதென்ன? கோர்வையாக சொல்லமுடியுமா?
இந்த கேள்விகளை படித்துள்ளீர்கள், இப்போது வேதாகமத்தை திறந்து 1 கொரிந்தியர் 13வது அத்தியாயத்தை நிதானமாக படித்துப் பார்த்து, மேற்கண்ட கேள்விகளுக்கு பதில்களை கண்டுபிடியுங்கள், ஆசீர்வதிக்கப்படுங்கள்.
இதே போன்று அடுத்த ஒரு முக்கியமான அத்தியாயத்தோடு சந்திக்கலாம்.
Comments
Post a Comment