1 கொரிந்தியர் அதிகாரம் 10: தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவித்து, தேவனுடைய பரிசுத்தத்தை புறக்கணிக்கும் சபை இறுதியில் தேவனுடைய தண்டனையைக் காணும்
அப்போஸ்தலர் பவுலடியார் கொரிந்தியர் சபைக்கு இந்த அதிகாரத்தில் ஒரு கடுமையான எச்சரிக்கையை கொடுக்கிறார். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய அற்புதங்களையும் ஆசீர்வாதங்களையும் அனுபவித்தாலும், பலர் பாவத்தினால் வீழ்ந்தார்கள் என்பதை நினைவூட்டுகிறார்.
இந்த அதிகாரம் சபைக்கு எச்சரிக்கையும் வழிகாட்டுதலும் ஆகும்.
1. ஆசீர்வாதங்கள் இருந்தாலும் வீழ்ச்சி ஏற்படலாம் (வசனங்கள் 1–5)
இஸ்ரவேல் மக்கள்:
செங்கடலை கடந்தார்கள்
மேகஸ்தம்ப நிழலில் நடத்தப்பட்டார்கள்
வானத்திலிருந்து பொழியப்பட்ட மன்னாவை சாப்பிட்டார்கள்
ஆவிக்குரிய தண்ணீரை குடித்தார்கள்
ஆனால் அவர்களில் பலர் தேவனைப் பிரியப்படுத்தவில்லை, அவர்கள் வனாந்தரத்தில் அழிந்தார்கள். இது மிகவும் ஆழமான எச்சரிக்கையாகும்.
சபைக்கு செய்தி:
திருச்சபை விசுவாசிகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது உண்மை, விசுவாசிகள் சபைக்கு தொடர்ந்து வருவதும் உண்மை, பரிசுத்த கர்த்தரின் பந்தியில் பங்கு பெறுவது உண்மை, இவை அனைத்தும் இருந்தாலும்:
பரிசுத்த வாழ்க்கை இல்லையெனில் ஆவிக்குரிய வீழ்ச்சி ஏற்படும்
இதனை ஒரு போதும் சபை மறக்கக்கூடாது.
2. இஸ்ரவேலை அழித்த நான்கு பாவங்கள் (வசனங்கள் 6–10)
பவுல் நான்கு முக்கிய பாவங்களை இங்கு குறிப்பிடுகிறார், இவைகளை பழைய ஏற்பாட்டு காலத்தில் இஸ்ரேல் மக்கள் செய்தார்கள்:
விக்கிரகாராதனை
விபச்சாரம் / பாலியல் அசுத்தம்
தேவனை பரிட்சைப் பார்த்தல்
முருமுருப்பு / குறை கூறுதல்
இவை எல்லாம் தேவனுடைய தீர்ப்பை இஸ்ரேல் மக்கள் மீது கொண்டு வந்தது.
இன்றைய சபைக்கும் எச்சரிக்கை:
பணம், புகழ், மனிதர்கள் மீது அதிக ஆசை
மறைவான பாவங்கள்
தேவனுடைய ஊழியத்தின் மீது குறை கூறுதல்
இவை சபையை ஆவிக்குரிய விதமாக பலவீனப்படுத்தும்.
3. ஆன்மீக பெருமை மிகவும் ஆபத்தானது (வசனம் 12)
“நிற்கிறேன் என்று நினைக்கிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்கக்கடவன்.”
“நான் விழ மாட்டேன்” என்று நினைப்பதே, பலரின் வீழ்ச்சிக்கு காரணமாகிறது. எனவே, சபையானது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், சபை என்றுச் சொல்லும் போது, போதகரும்/மேய்ப்பரும், மூப்பர்களும் மற்றும் விசுவாசிகளும் இதில் அடங்குவர்.
4. சோதனை வரும் போது தேவன் வழி தருகிறார் (வசனம் 13)
இது மிகவும் ஆறுதல் தரும் வசனம், தேவன் அனுமதிக்கும் சோதனைக்கு ஒரு எல்லை இருக்கிறது, அந்த எல்லைக்குள் மட்டுமே நம்மை அவர் பரிட்சிப்பார். அதோடு கூட, தேவன் அச்சோதனையிலிருந்து தப்பிக்கும் வழியையும் கொடுக்கிறார். விசுவாசிகள் அதனை தெரிந்தெடுத்து வெற்று பெறலாம்.
5. விக்கிரக ஆராதனையிலிருந்து தப்பித்து விலகி ஓடுங்கள்(வசனங்கள் 14–22)
பவுல் கூறுகிறார்: “விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்”
ஒரே நேரத்தில்:
கர்த்தரின் பந்தியிலே (மேசையில்) புசிக்கவும்
பேய்களின் பந்தியிலே (மேசையில்) புசிக்கவும்
இரண்டிலும் பங்கு கொள்ள முடியாது. விசுவாசிகள் கிறிஸ்துவையும் உலகத்தையும் ஒன்றாக பிடித்துக்கொண்டு வாழ முடியாது.
6. எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்காக செய்யுங்கள் (வசனங்கள் 23–33)
கிறிஸ்தவர்கள் தாங்கள் செய்யும் செயல்கள் பற்றி தங்களிடமே கேட்க வேண்டிய கேள்விகள்:
நான் செய்யும் இந்த செயல் தேவனை மகிமைப்படுத்துமா?
நான் செய்யும் இந்த செயல் மற்றவர்களுக்கு இடறலை ஏற்படுத்துமா?
பவுல் முடிவில் சொல்கிறார்:
"ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” - 1 கொரிந்தியர் 10:31
1 கொரிந்தியர் 10 சபைக்கு சொல்லும் முக்கிய பாடம்:
ஆசீர்வாதங்கள் இருந்தாலும் பரிசுத்தம் இல்லையெனில் வீழ்ச்சி வரும்
மறைவான பாவங்கள் சபையை அழிக்கும்
ஆன்மீக பெருமை மிகவும் ஆபத்து
சோதனையில் தேவன் தப்பிக்கும் வழி தருகிறார்
தேவன் முழு அர்ப்பணிப்பை விரும்புகிறார்.
“தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவித்து, தேவனுடைய பரிசுத்தத்தை புறக்கணிக்கும் சபை இறுதியில் தேவனுடைய தண்டனையைக் காணும்.”

Comments
Post a Comment