கேள்வி: 'வாரம் முழுவதும் கஷ்டப்பட்டு வரும் விசுவாசிகளுக்கு ஆறுதல் தரும் தேவ செய்திகள் சபையில் சொன்னால் போதாதா?' ஏன் சவால்கள் நிறைந்த ஆத்தும ஆதாயம் செய்ய உற்சாகப்படுத்தும் தேவ செய்திகளைச் சொல்லவேண்டும்?
ஒரு சகோதரர் கீழகண்ட கேள்வியை கேட்டார், அதற்கு என்னுடைய பதிலை இங்கு தருகிறேன். வாசகர்கள் தங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடலாம்.
கேள்வி: 'வாரம் முழுவதும் கஷ்டப்பட்டு வரும் விசுவாசிகளுக்கு ஆறுதல் தரும் தேவ செய்திகள் சபையில் சொன்னால் போதாதா?' ஏன் சவால்கள் நிறைந்த ஆத்தும ஆதாயம் செய்ய உற்சாகப்படுத்தும் தேவ செய்திகளைச் சொல்லவேண்டும்?
https://youtube.com/shorts/JRGKIN2TDqo?feature=share
பிரதர் ஜோஷுவா, உங்கள் கருத்துக்கு நன்றி.
ஞாயிறு ஆராதனை நேரத்தில் சபையில் போதகர் பகிர்ந்துக்கொள்ளும் தேவசெய்தி: 'சவால்கள் நிறைந்ததாக இருக்கவேண்டும்' என்று சகோதரர் ஸ்டான்லி அவர்கள் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
ஒரு ஞாயிறு ஆராதனையில் பொதுவாக கீழ்கண்ட பகுதிகள் நம் சபைகளில் இருக்கும்:
- தொடக்க ஜெபம் .
- சில பாடல்களை பாடுவோம், கர்த்தரை ஆராதிப்போம்.
- ஒரு வேத பகுதியை வாசிப்போம் (சங்கீதமோ, அல்லது இதரவேத பகுதியோ).
- சாட்சி சொல்லுவோம், சபை அறிவிப்புக்கள் இருக்கும்.
- முக்கியமான சில காரியங்களுக்காக ஜெபம் செய்வோம்.
- தேவ செய்தியை போதகர்/பாஸ்டர் கொடுப்பார்.
- கடைசி ஜெபம்
இவைகளில் சில மாற்றங்கள் ஒவ்வொரு சபையிலும் இருக்கும், ஆனால் பொதுவாக இவைகளை பார்க்கலாம்.
இந்த இடத்திலே 'தேவ செய்தி' சவால் நிறைந்ததாக இருக்கவேண்டும் என்று சொல்லும் பொது, பொதுவாக தேவ செய்திகள் கீழ்கண்ட வகைகளில் இருக்கும்:
1) ஆறுதல் தரும் தேவ செய்திகள்:
வாரம் முழுவதும் உழைத்து, பல பிரச்சனைகளை சந்தித்து, சொந்துப்போய், கடன் தொல்லை, குடும்ப பிரச்சனை போன்றவைகளை சந்தித்து, சோர்ந்து போய் வரும் விசுவாசிகளை 'தேற்றி, ஆறுதல் படுத்தி, நம்பிக்கை கொடுத்து, வரும் நாட்களில் விசுவாசத்தோடு வாழ' சரியான வேத வசனங்களைச் சொல்லி, அனுப்புவது இந்த வகையை தேவ செய்தியைச் சாரும்.
நான் இயேசுவை ஏற்றுக்கொண்டு 30+ ஆண்டுகள் ஆகிறது, ஒரு சபையில் மூப்பனாகவும் 20+ ஆண்டுகளாக இருக்கிறேன், சபையில் தேவ செய்திகளையும் நான் கொடுக்கிறேன். என் கருத்துப்படி, ஒவ்வொரு சபையிலும், 50%க்கும் அதிமான பக்கள், இப்படிப்பட்ட கேள்விகளோடும், துக்கத்தோடும் சபைக்கு வருகிறார்கள், இவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஆறுதல் வார்த்தைகள் தேவை, இதனால் இவர்களின் விசுவாசமும் வளரும். இது முதல் வகை.
2) வேத அறிவை வளர்க்கும் தேவ செய்திகள்:
இரண்டாவதாக, ஒவ்வொரு சபையிலும், மேற்கண்ட வகையான தேவையுள்ள மக்களைத் தவிர்த்து, ஆழமான வேத அறிவுக்காக காத்துக்கொண்டு இருக்கும் மக்களும், வாலிபர்களும் இருப்பார்கள். இவர்கள் ஓரளவிற்கு செட்டில் ஆகிவிட்ட விசுவாசிகளாக இருப்பார்கள். நான் செட்டில் என்று சொன்னது முக்கியமாக உலக படியான ஆசீர்வாதமாகிய நல்ல வேலை, குடும்பம், பணம் பிரச்சனையின்மை போன்றவையாகும்.
இவர்களுக்கு 'கர்த்தர் உன் கண்ணீரை துடைப்பார், கவலைகளை மாற்றுவார்' என்று ஒவ்வொரு வாரமும் சொன்னால், இவர்களுக்கு போர்(சலிப்பு) வந்துவிடும், காரணம் 'இவர்களின் கண்ணீரை கர்த்தர் ஏற்கனவே துடைத்துவிட்டார், கவலைகளை மாற்றிவிட்டார்' எனவே, 'செழிப்பு சம்மந்தப்பட்ட செய்திகள், ஆறுதல் செய்திகள்' இவர்களை அதிகமாக பாதிக்காது.
இவர்களுக்கு வேதத்தை நன்றாக அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருக்கும், இவர்களுக்கு பைபிளிலிருந்து பல கேள்விகள் எழும், அவைகளுக்கு பதில்களை இவர்கள் தேடுவார்கள். இவர்களின் இந்த 'வேத பசிக்கு' சபை சரியான கொழுமையான மன்னாவை போடவில்லையென்றால், 'இந்த சிங்கங்கள்’ உணவைத் தேடி, வேறு சபைக்குச் சென்றுவிடும். [ஊழியர்களே: எச்சரிக்கை, அரைத்த மாவையே ஒவ்வொருவாரமும் அரைத்தால், இவர்கள் சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள். வாரமெல்லாம் வேறு அலுவல்களை பார்த்துவிட்டு (ஊழிய வேலை தான்) சனிக்கிழமை இரவு உட்கார்ந்துக்கொண்டு, ஞாயிறு செய்தியை தயாரிக்கும் ஊழியர்களின் சபைகளில், இந்த நிலை அதிகமாக இருக்கும்.]
குறிப்பு: திடீரென்று ஒரு நாள் உடல்நிலை சரியில்லாமல் ஒருவாரம் மருத்துவ மனையில் அட்மிட் ஆகி வந்தால், மறுபடியும் 'ஆறுதல் செய்திகள்' இவர்கள் காதுகளுக்கு தேன் போல இருக்கும், இந்த நிலை ஒவ்வொரு விசுவாசியின் வாழ்க்கையில் வந்து போகும்.
3) பல தீய பழக்கங்களை விட முடியாமல் தவிப்பவர்களுக்கு தேவ செய்திகள்(எல்லா வயதினருக்கும்):
மேற்கண்ட இரண்டு வகையினரிலும், இந்த மூன்றாவது நிலையில் இருப்பவர்கள் அனேகர் இருப்பார்கள், முக்கியமாக தற்கால ஊடகங்களினால், சமுதாய கட்டமைப்பினால் சில தீயபழக்கங்களிலிருந்து வெளியே வரமுடியாமல் தவிப்பவர்களுக்கு, சில சவால் நிறைந்த செய்திகளை, பல உண்மையான சாட்சிகளைச் சொல்லி, வேதத்திலிருந்து எப்படி மக்கள் தங்களை தீய பழக்கங்களிலிருந்து காத்துக்கொண்டார்கள், எப்படி தேவன் அவர்களுக்கு உதவி செய்தார், என்பதை தெளிவாக விளக்கும் தேவ செய்திகள் சொல்லப்படவேண்டும்.
இப்படிப்பட்ட செய்திகளுக்காக பொதுவாக சபைகளில், வேறு ஊழியர்களை அழைத்து வந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 'ஒரு சவால் நிறைந்த செய்திகளை' சொல்வார்கள்.
4) ஆத்தும ஆதாயம் செய்ய உற்சாகப்படுத்தும் சவால் நிறைந்த செய்திகள்:
அனேக சபைகள் மேற்கண்ட மூன்று வகையான செய்திகளில் 'ஆர்வமாக சபையை' மேய்க்கிறார்கள், ஆனால் இந்த நான்காவது வகையான ஆத்தும ஆதாய செய்திகளுக்கு குறைவான முக்கியத்துவத்தை கொடுக்கிறார்கள் என்பதை யாருமே மறுக்கமுடியாது.
ஆண்டுக்கு ஒரு முறை 'ஆவிக்குரிய கூட்டம் வைக்கப்பட்டால், அந்த கூட்டத்தில் பேசும் ஊழியர், அதிர்ஷ்டவசமாக ஒரு மிஷனரி களத்தில் இருப்பவராகவோ, அல்லது நற்செய்தி அறிக்க ஆர்வமுள்ளவராகவோ' அமைந்துவிட்டால், இப்படிப்பட்ட 'ஆத்தும ஆதாய' செய்திகள் சபைக்கு கிடைக்கும். துரதிஷ்டமாக அவர் விசேஷித்த ஆராதனை வீரராக இருந்து, ஆடல், பாடல், அந்நிய பாஷைகளில் மக்களை தள்ளுவது போன்றவற்றில் 'தேர்ச்சி' பெற்றவராக இருந்தால், கதை முடிந்தது, ஆத்துமாவும் இல்லை, ஆதாயமும் இல்லை [மன்னிக்கவும், நான் கொஞ்சம் வேடிக்கையாக எழுதுவேன் அவ்வப்பொழுது, ஆனால், நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டும்].
மேற்கண்ட வீடியோவில், சகோதரர் ஸ்டான்லி அவர்கள் சொன்னது, இந்த 'நான்காவது' வகையான ஆத்தும ஆதாய தேவ செய்திகள், மக்களை தட்டிஎழுப்பி, ஆத்தும ஆதாயம் செய்யும் படி, உற்சாகப்படுத்தும் செய்திகள், சபைகளில், ஞாயிறு ஆராதனைகளில் மிகவும் குறைவு என்பதாகும்.
ஒரு சபைக்கும் இந்த நான்கு வகையான செய்திகள் சொல்லப்படவேண்டும்:
1) ஆறுதல் தரும் தேவ செய்திகள்:
2) வேத அறிவை வளர்க்கும் தேவ செய்திகள்:
3) பல தீய பழக்கங்களை விட முடியாமல் தவிப்பவர்களுக்கு தேவ செய்திகள்(எல்லா வயதினருக்கும்):
4) ஆத்தும ஆதாயம் செய்ய உற்சாகப்படுத்தும் சவால் நிறைந்த செய்திகள்:
பெரும்பான்மையான சபைகளில், முதல் வகையான செய்திகள் தான் அதிகம், மற்றவைகளுக்கு குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சகோ ஸ்டான்லி அவர்கள் மிஷனரி ஊழியம், ஆத்தும ஆதாயம் ஊழியத்தில் அதிகமாக பங்கு பெற்று இருப்பதினால், மேலும், அவர் 'வேதத்தை போதிப்பவராக இருப்பதினால் (Bible Teacher)' அவரது முக்கியத்தும் பெரும்பான்மையாக 'ஆத்தும ஆதாயம், வேத அறிவு மற்றும் எல்லோருக்கும் வேதம் சரியான வழியில் சேரவேண்டும்' என்ற பாணியிலேயே இருக்கும்.
ஆத்தும ஆதாயம் என்பது ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கப்பட்ட ஊழியம் அல்ல, ஒவ்வொரு விசுவாசியும் தங்களால் முடிந்த அளவிற்கு 'தனிப்பட்ட முறையில் ஆத்தும ஆதாயம் செய்யவேண்டும்'. இதனை சபையானது குறைந்த பட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது 'சொல்லி சபையை உற்சாகப்படுத்த வேண்டும்'. இது தான் நோக்கமே தவிர, மற்ற வகையான செய்திகளை சொல்லவேண்டாம் என்பதல்ல. மேலும் 'ஆறுதல் தரும்' தேவ செய்திகளுக்குத் தான் அதிக முக்கியத்துவமும் மக்கள் கொடுப்பார்கள் என்பதும் ஒரு காரணம்
என்னைக் கேட்டால், சபையில் எல்லா வகையான மக்களுக்கும் தேவையான மன்னா கொடுக்கப்படவேண்டும். ஒவ்வொரு செய்தியிலும், முதல் மூன்று கட்டாயம் இருக்கவேண்டும் (ஓரளவிற்காகவது 3 பாயிண்ட்களையும் தொடவேண்டும்). மாதம் ஒரு முறை ஆத்தும ஆதாயம் செய்தியை, சவால் நிறைந்த செய்தியை கொடுக்கவேண்டும்.
இப்படி செய்தால், சபை மக்கள் கர்த்தருக்குள் ஆறுதலும் அடைவார்கள், வேதத்தை ஆழமாக கற்றுக்கொள்வார்கள், தீயபழக்கங்களிலிருந்து வெளியே வருவார்கள், கடைசியாக, கர்த்தரின் கடைசி கட்டளையையும் காற்றில் விடாமல் பின்பற்றுவார்கள், ஆத்தும அறுவடையும் நடக்கும்.
ஆக, வெறும் ஆறுதலை மட்டும் ஒவ்வொரு வாரமும் சபை தேவ செய்திகளாக சொன்னால், அந்த சபை 'வேத அறிவில் வளராது, அதே போல, ஆத்தும ஆதாயமும் செய்யாது', இது சபைக்கும் கிறிஸ்தவத்தும் நல்லதல்ல, கடைசியாக, அந்த சபை 'செழிப்பு உபதேசம் என்ற கள்ள உபதேசத்திற்கு அடிமையாகிவிடும்'.
திடீரென்று ஒரு பிரச்சனை வந்தால், விசுவாசிகள 'தளர்ந்து போய்விடுவார்கள்', இவர்களை 'ஆட்டுத்தோல் போர்த்துக்கொண்டு வரும் ஓநாய்கள் கொள்ளை கொண்டு போய்விடும்'. கடைசியாக, அந்த சபை பாஸ்டர், ‘என் சபையை விட்டு ஏன் விசுவாசிகள் சென்றுவிட்டார்கள்?’ என்று முறையிட்டால், இதற்கு நீங்கள் தானே காரணம், வேதத்தை சரியாக போதிக்காமல், வெறும் 'ஆசீர்வாதம், சுகம், செழிப்பு, பணம்' போன்றவற்றை மட்டுமே போதித்தால், இது தானே நடக்கும், என்ற பதில் தான் கிடைக்கும்.
ஆக, இந்த கேள்வியை கேட்ட சகோதரருக்கு, நான் சொல்லவருவது என்னவென்றால்,
- ஆதியாகமம் முதற் கொண்டு வெளிப்படுத்தல் வரை செய்திகள் சபையில் சொல்லப்படவேண்டும்',
- ஆறுதல் தேவ செய்தி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் 'பாவத்திலிருந்து விடுபட சவால் நிறைந்த தேவ செய்தி சொல்வதாகும்'.
- இதே போல, ஆத்தும ஆதாய சவால்கள் நிறைந்த, நற்செய்தி அறிவிக்க உற்சாகப்படுத்தும் தேவசெய்திகளும் முக்கியம்.
சகோதர சகோதரிகள், இவைகள் பற்றி மேலும் ஏதாவது கேள்விகள் இருந்தால், கேட்கவும், கர்த்தருக்கு சித்தமானால் பதில் சொல்லமுயலுவேன்.

Comments
Post a Comment