கேள்வி: கிறிஸ்தவர்கள் தவறாக பயன்படுத்தப்படும் 10 கிறிஸ்தவ சொற்கள் எவை?

 


கிறிஸ்தவர்கள் தவறாக பயன்படுத்தப்படும் 10 கிறிஸ்தவ சொற்கள் எவை? 

தவறாகப் பயன்படுத்தப்படும் சொற்கள், தவறான வாழ்க்கையை உருவாக்கும், சொற்கள் மாறினால் சத்தியம் மங்கும்.


1. அபிஷேகப்பட்டவர் (Anointed)”

தவறான பயன்பாடு: இன்று சில ஊழியர்களும், விசுவாசிகளும் "அபிஷேகப்பட்டவர்" என்ற வார்த்தையை பயன்படுத்துவதின் நோக்கம், 'இவர்களை நாம் கேள்வி கேட்கக்கூடாது' என்ற கோணத்தில் பயன்படுத்துகிறார்.  அந்த ஊழியர் அபிஷேகம் பெற்றவர் என்று அடிக்கடிச் சொல்கிறார்கள், உண்மையில் "அபிஷேகம் பெற்ற ஊழியர், அபிஷேகம் பெறாத ஊழியர்" என்ற பாகுபாட்டை வேதம் காட்டுவதில்லை. எல்லா ஊழியர்கள், விசுவாசிகளும் அபிஷேகம் பெற்றவர்களே!


விசுவாசிகளின் இந்த 'தவறான புரிந்துக்கொள்ளுதலை, சில ஊழியர்கள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, தங்கள் பாவங்களை, குறைகளை யாரும் கேள்வி கேட்கக்கூடாது' என்று போதனை செய்கிறார்கள்.

சரியான அர்த்தம்: எல்லா விசுவாசிகளும் அபிஷேகம் பெற்றவர்களே! 

1 யோவான் 2:20,27

  • 2:20 நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம்பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.
  • 2:27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.


உதாரணம்: தாவீது ராஜாவாக அபிஷேகம் பெற்றார் (1 சாமுவேல் 16), ஆனால், அவருக்கு விருப்பமான படி அவர் வாழமுடியாது, அப்படி வாழ்ந்தால், தண்டனை அல்லது ஒழுங்கு நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்? 

இதனை படிக்கின்ற நீங்கள், இதனை மறுக்கமுடியுமா? தாவீதுக்கே தண்டனை உண்டு என்றால், இன்றைய கிறிஸ்தவர்கள், ஊழியர்கள் எம்மாத்திரம்?

அபிஷேகம் அதிகாரம் அல்ல—பொறுப்பு.

  • என்பது பாவம் செய்து தப்பிக்க கொடுக்கப்பட்ட அதிகாரம் கிடையாது, அது உண்மையாக பரிசுத்தமாக நடக்க கொடுக்கப்பட்ட பொறுப்பு என்பதை மறக்கவேண்டாம்


2. “ஆசீர்வாதம் (Blessing)”

தவறான பயன்பாடு: பணம், பதவி, வெற்றி மட்டுமே ஆசீர்வாதம் என்று நினைக்கிறார்கள் இன்றைய கிறிஸ்தவர்கள்.

இன்றைய ஊழியர்களில் சிலர் 'ஆசீர்வாதம்' என்றாலே, பணம் பதவி என்றுச் சொல்லி, வேதத்திற்கு எதிராக போதித்துக்கொண்டு இருக்கிறார்கள், கடைசியாக இதுவே செழிப்பு உபதேசம் தோன்ற ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. உண்மையான ஊழியர்களும் இதனை அறியாமல் மாட்டுக்கொண்டு இருக்கிறார்கள், இது பரிதாபத்துக்கு உரிய ஒன்று.


சரியான அர்த்தம்: ஆன்மீக வளர்ச்சி, சமாதானம், துன்பத்திலும் நிலைத்திருக்கும் கிருபை கூட ஆசீர்வாதம் (மத்தேயு 5:3–12) தான் என்பதை மறக்காதீர்கள்.


உதாரணம்: யோபு துன்பத்தில் இருந்தாலும் தேவனுக்கு உண்மையாய் இருந்தார் (யோபு 1) இது தான் ஆசீர்வாதம்.


எல்லா ஆசீர்வாதமும் வெளிப்படையான வெற்றியாக இருக்காது. பாடுகளை கர்த்தருக்குள் சகித்து, பொன்னாக விளங்குவதும் ஆசீர்வாதமே!


3. “அனுகிரகம் (Favor)”

தவறான பயன்பாடு: “தேவன் எனக்கு மட்டும் சலுகை கொடுத்தார்” என்று பெருமை பேசுவது.


சரியான அர்த்தம்: தேவன் பாகுபாடு பார்க்காதவர் (ரோமர் 2:11). அனுகிரகம் கிருபையின் வெளிப்பாடு அனைவருக்கும் அவர் கொடுத்துள்ளார்.


உதாரணம்: மரியாளுக்கு அனுகிரகம் கிடைத்தது, ஆனால் அது ஒரு பெரிய பொறுப்பும் ஆகும் (லூக்கா 1:30). அனுக்கிரகம் கொடுக்கப்படுவது நாம் பெருமை அடித்துக்கொள்வதற்கு அல்ல, அத்துடன் அவர் கொடுத்த மிகப்பெரிய ஊழியத்தை நிறைவெற்றவே கொடுக்கப்படுகிறது.

அனுகிரகம் பெருமைக்கு அல்ல—பணிக்கு.


4. “நியாயந்தீர்ப்பு செய்யாதே (Judge Not)”

தவறான பயன்பாடு: தவறை சுட்டிக்காட்டாமல் இருக்க இந்த வசனத்தை பயன்படுத்துகிறார்கள். தவறு செய்கின்ற ஒவ்வொரு ஊழியரும், கிறிஸ்தவரும் பயன்படுத்தும் ஒரு மந்திரம் 'யாரையும் நியாயந்தீர்க்காதே' என்பது தான்.

இயேசுவோ, பைபிளோ யாரையும் நியாயந்தீர்க்காதே என்று கட்டளையிடவில்லை, ஆனால் அதனை சரியான நேர்மையான முறையில் செய்யுங்கள் என்று தான் சொல்கிறது.

தவறு செய்கிறவர்களை கடிந்துக்கொள்வதும், ஆலோசனை சொல்வதும், சீர்திருத்துவதும் நியாயந்தீர்ப்பில் தான் வருகிறது. இதனை செய்யும் படி வேதம் கட்டளையிடுகிறதே!

சரியான அர்த்தம்: கபட நியாயந்தீர்ப்பைத் தான் இயேசு கண்டித்தார் (மத்தேயு 7:1–5).

இந்த இடத்தில் இயேசு 'நியாயந்தீர்க்காதே என்று சொல்லவில்லை, எப்படி நியாயந்தீர்க்க வேண்டும் என்று கூறுகிறார்'. நாம் சுத்தவானாக இருந்தால், மற்றவர்களின் குறைகளை சுட்டிக்காட்டி அவர்களை நல்வழியில் நடத்தலாம் என்பது தான் கருத்து இங்கே!


உதாரணம்: பவுல் சபையில் உள்ள பாவத்தைத் நியாயந தீர்ப்பதற்கு கட்டளையிடுகிறார் (1 கொரிந்தியர் 5).

நாம் நியாயமாகத் தீர்க்க வேண்டும்—கபடமாக அல்ல, நேர்மையாக‌.


5. “தேவன் எனக்குச் சொன்னார் (God Told Me)”

தவறான பயன்பாடு: தனிப்பட்ட ஆசைகளை தேவனின் குரல் என்று கூறுவது.

முதலாவதாக, அனேக முறை நம்முடைய தனிப்பட்ட ஆசைகள், நாம் மனதுக்குள் பேசுவதையே 'தேவன் நம்மோடு பேசுகிறார்' என்று தவறான நினைத்து செயல்படுகிறோம். இது விசுவாசிகளால் அறியாமல் நடப்பது. 

இரண்டாவதாக, சில ஊழியர்கள் தங்கள் பண ஆசை அல்லது விசுவாசிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு 'கர்த்தர் என்னோடு இப்படி பேசினார்' என்று தெரிந்தே பொய் சொல்கிறார்கள். 100 கோடியில் ஒரு சபை கட்டச்சொல்லி பேசினார் என்று தங்கள் சுய ஆசைகளை தேவனின் பெயர் மீது சுமத்தி, அதனை விசுவாசிகளிடம் சொல்லி, பணம் வசூல் செய்கிறார்கள்.

மூன்றாவதாக‌,  சிலவேளைகளில் விசுவாசிகளோ, ஊழியர்களோ, தாங்கள் கேட்கும் சத்தம், அல்லது மனதுக்குள் எழும்பும் ஆசைகள்/எண்ணங்கள் யாரிடமிருந்து வருகின்றது என்பதை உணராமல், சாத்தான் பேசுவதையும், 'கர்த்தர் பேசுகிறார்' என்றுச் சொல்லி வஞ்சிக்கப்படுகிறார்கள்.


சரியான அர்த்தம்: தேவனின் வார்த்தை வேதாகமத்திற்கு எதிராக இருக்காது (2 தீமோத்தேயு 3:16) என்பதை நாம் மறக்கக்கூடாது.  ஒரு ஊழியர் 'கர்த்தர் என்னோடு பேசி இதை செய்யச்சொன்னார் என்று அறிந்துக்கொண்டு, தப்பிப்பது எப்படி'? அவர் சொன்னது பைபிளின் கோட்பாடுகளுக்கும், கட்டளைகளுக்கும் எதிராக இருக்கின்றதா என்பதை சரி பார்க்கவேண்டும்.

எவ்வளவு பெரிய ஊழியக்காரர் சொன்னாலும் சரி, அது பரிசுத்த வேதாகமத்திற்கு எதிராக இருந்தால், 'நேரடியாக அதனை மறுக்கவேண்டும்', அது நிச்சயமாக தேவனிடமிருந்து வந்த ஒன்றாக இருக்காது.


உதாரணம்: சமுவேல் சிறுவயதில் தேவனின் குரலைக் கேட்டபோது அது உறுதிப்படுத்தப்பட்டது (1 சாமுவேல் 3).


கவனிக்கவும்: எல்லா “குரலும்” தேவனிடமிருந்து வரும் குரல் அல்ல‌, இப்படிப்பட்ட எல்லா வகையான தரிசனங்கள், கனவுகள், சத்தங்கள் போன்றவற்றை பரிசோதித்துப் பார்த்து நாம் முடிவு எடுக்கவேண்டும்.


6. “செழிப்பு (Prosperity)”

தவறான பயன்பாடு: செல்வந்தர்களாவது, பணம் அதிகமாக சம்பாதிப்பது தான் "செழிப்பு" என்று தவறாக அனேகர் நினைத்துவிடுகின்றனர்.


சரியான அர்த்தம்: ஆவிக்குரிய முதிர்ச்சி, மன அமைதி, சமாதானம் தேவனுடன் உறவு போன்றவை உண்மையான செழிப்பு ஆகும் (3 யோவான் 1:2).

உதாரணம்: லாசரு ஏழையாக இருந்தாலும் தேவனுக்குப் பிரியமானவன் (லூக்கா 16:19–31).

செழிப்பு உள்ளத்தில் ஆரம்பிக்கிறது, பணத்தில் மட்டுமல்ல‌.  மேலும் ஏழையாக இருப்பது ஒரு சாபம் அல்ல என்பதை அறியுங்கள்.

செழிப்பு உபதேசம் என்ற கள்ள உபதேசம் போதிக்கின்றவர்கள், ஏழ்மை என்பது கர்த்தரின் சாபம் என்றுச் சொல்லி, விசுவாசிகளை ஏமாற்றுவார்கள். ஆனால், வேதம் இப்படி சொல்லவில்லை. பழைய ஏற்பாட்டில் பெரும்பான்மையான தீர்த்தரிசிகள் (ஏசாயா, எரேமியா, எலியா, எலிசா...) யாருமே, பணம் படைத்த பெரும் செல்வந்தர்களாக இருந்ததில்லை.  

இவர்கள் கர்த்தரின் ஆசிர்வாதம் பெறாதவர்கள் என்றுச் சொல்லமுடியுமா?


7. “ஆவிக்குரிய போராட்டம் (Spiritual Warfare)”

தவறான பயன்பாடு: நாம் சந்திக்கும் எல்லா ஆவிக்குரிய போராட்டங்களுக்கும் 'சாத்தான்' தான் காரணம் என்று சொல்வதும் உண்மையல்ல, இதுவும் தவறு.

ஒரு சில சோதனைகள் சாத்தான் மூலம் வருவது உண்மை தான், ஆனால் எல்லா வகையான போராட்டத்திற்கு அவனே காரணம் என்றுச் சொல்வது வேதத்தின்படி உண்மையல்ல.


சரியான அர்த்தம்: பாவத்துடன் போராடுதல், மனது பாவத்தில் விழும்படி சாயுதல், சத்தியத்தில் நிலைத்திருத்தல் போன்றவையும்  ஆவிக்குரிய போராட்டமே, ஆனால் இதற்கு நாம் தான் பொறுப்பு வகிக்கவேண்டும், அனைத்திற்கும் மற்றவர்கள் மீது காரணம் சொல்லக்கூடாது.(எபேசியர் 6:11–18).


உதாரணம்: இயேசு சாத்தானை வசனத்தால் எதிர்த்தார் (மத்தேயு 4).

சில சமயம் பிரச்சனை சாத்தான் மூலம் வராது, நாமே நம் மனதை கட்டுப்படுத்தாமல் எடுக்கும் முடிவுகளினால் வரும்.


8. “அழைப்பு (Calling)”

தவறான பயன்பாடு:அழைப்பு என்பது ஊழியர்களுக்கும், பாஸ்டர்களுக்கு மட்டுமே வரும் என்று தவறாக நம்புகிறோம். 


சரியான அர்த்தம்: ஒவ்வொரு விசுவாசியும் தேவனுக்காக வாழ அழைக்கப்பட்டவர் (கொலோசெயர் 3:23).


உதாரணம்: தானியேல் அரசாங்கத்தில் இருந்தும் தேவனுக்கு உண்மையாய் இருந்தார் (தானியேல் 6).


நீங்கள் இருக்கும் இடமே, வேலை செய்யும் ஸ்தலமே நீங்கள் ஊழியம் செய்யும் பணித்தளமாக இருக்கிறது.கர்த்தர் நம்மை அந்த இடத்தில் வைத்தார் அதற்காக அழைத்தார் என்று எண்ணி, கர்த்தருக்கு உண்மையான சீடர்களாக நாம் வாழ்ந்தால், இயேசுவை பிரதிபலித்தால், கர்த்தரின் நாமம் அங்கு மகிமைப்படும்.

எனவே, எனக்கு அழைப்பு இல்லை என்றுச் சொல்லி, சோர்ந்து போகாமல், உங்களால் முடிந்த அளவுக்கு ஊழியம் செய்யுங்கள்.


9. “சபை (Church)”

தவறான பயன்பாடு: சபை என்றால், ஒரு கட்டியம் என்றோ, ஞாயிறு அன்று கூடி ஜெபிக்கும் ஒரு இடமென்றோ தவறாக நினைக்கிறோம்.

சரியான அர்த்தம்: விசுவாசிகள் தான் சபை (1 கொரிந்தியர் 12:27), கட்டியம் சபை அல்ல‌.


உதாரணம்: ஆரம்ப சபை வீடுகளில் கூடினார்கள் (அப்போஸ்தலர் 2:46).

நீங்கள் தேவனை ஆராதிக்க‌ சபைக்கு போகவில்லை—நீங்களே சபை.


10. “விசுவாசம் (Faith)”

தவறான பயன்பாடு: விசுவாசம் என்பது நாம் எதை விரும்பினால், அதனை செய்துக்காட்டி, நம் தேவையை பூர்த்து செய்யும் கருவி என்று தவறாக நினைக்கிறோம்.


சரியான அர்த்தம்: விசுவாசம் என்பது தேவனுடைய சித்தத்தில் நம்பிக்கை வைத்து அவருக்கு முழுவதுமாக‌ ஒப்படைத்து வாழுவது தான் விசுவாசம் (எபிரெயர் 11).  நாம் விரும்பியதே நமக்கு கிடைக்காவிட்டாலும், நமக்கு எதிராக சூழ்நிலைகள் இருந்தாலும், கர்த்தர் மீது வைக்கும் அசையாத நம்பிக்கையே 'விசுவாசம்' ஆகும்.

உதாரணம்: ஆபிரகாமுக்கு தேவனின் முழு திட்டமும் தெரியாவிட்டாலும், தேவன் சொன்னபடி நடந்தார், இது தான் விசுவாசம் (ஆதியாகமம் 22).

விசுவாசம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு கட்டுப்படாது, எல்லா நேரங்களும், சூழல்களும் நம்பிக்கையாக இருக்கும் (நமக்கு எதிராக நடந்தாலும் சரி).

இந்த 10 காரியங்களை சரியாக புரிந்துக்கொண்டால், ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்க்கை சீர்படும், தவறான பாதையிலுருந்து நேரான பாதையில் பயணம் தொடரும்.


தவறாகப் பயன்படுத்தப்படும் சொற்கள், தவறான வாழ்க்கையை உருவாக்கும், சொற்கள் மாறினால் சத்தியம் மங்கும்.

ஆகையால், நாம் பிரபலமான வார்த்தைகளுக்குத் திரும்ப வேண்டாம்—
வேதாகம அர்த்தத்திற்குத் திரும்ப வேண்டும்!

ஜெபம்

“கத்தரே, நாங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை சுத்திகரியுங்கள். எங்கள் மனதையும், போதனையையும் சத்தியத்திற்குக் கொண்டு வாருங்கள். தவறான புரிதலிலிருந்து எங்களை விடுவித்து,உமது வார்த்தையில் நிலைத்திருக்க கிருபை தாரும். ஆமேன்.”

Comments

Popular posts from this blog

1 & 2 Corinthians Nutshell: A Church in Crisis – A Gospel That Restores

Sermon: “God’s Creative Destruction: Breaking to Build Better

Question 11: If Jesus redeemed us from the curse of the Law, why do believers still struggle with sin? Why don’t we experience total victory now?